திங்கள், 31 ஜனவரி, 2022

Ratha sapthami

 (07 -02-2022 ) ரத சப்தமி & சூரிய ஜெயந்தி 

சூரியனை வழிபட மறவாதீர்கள்...!! 


( 8.2.2022 - வாக்கியப்படி ரதசப்தமி )


திருப்பதி போன்ற பிரசித்தி பெற்ற கோவில் தலங்களில் கொண்டாடப்படும் நாள்.


ரத சப்தமி... சூரியன் பிறந்த கதை...!* 


காஷ்யப மகரிஷியின் மனைவி அதிதி கர்ப்பமாக இருந்த நேரத்தில் கணவருக்கு உணவு பரிமாறிக்கொண்டிருந்தாள். அந்த நேரத்தில் ஒரு அந்தணர் வந்து உணவு கேட்டார். கணவருக்கு பரிமாறியபின்னர் மெதுவாக நடந்து அந்தணருக்கு உணவு எடுத்து வந்தாள் அதிதி. இதனால் கோபம் கொண்ட அந்தணர், தர்மத்தை புறக்கணித்துவிட்டு கர்ப்பத்தை பாதுகாப்பதற்காக மெதுவாக நடந்து வந்த அந்த கர்ப்பம் கலைந்து போகட்டும் என்று சாபமிட்டார். 


 அந்தணரின் சாபம் கேட்டு அதிர்ச்சியடைந்த அதிதி தன் கணவரிடம் நடந்தவற்றை விளக்கினாள். இதைக்கேட்ட காஷ்யப முனிவர், கவலைப்படாதே! அமிர்தம் நிறைந்த உலகில் இருந்து என்றைக்கும் அழிவில்லாத மகன் நமக்கு கிடைப்பான் என்று வாக்களித்தார். அதன்படி ஒளி பொருந்திய புத்திரன் ஒருவர் அவர்களுக்கு கிடைத்தார். அவரே உலகைக் காக்கும் சூரியன். 


சூரியன் பிறந்த நாள் திதிகளில் ஏழாவது நாளான சப்தமி திதி ஆகும். அந்த நாளிலேயே சப்தமி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.


இந்த இனிய நாளில் சூரிய உதயத்தில் எழுந்து புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவது சிறப்பு சேர்ப்பதாகும். அப்படி செய்ய இயலாதவர்கள் வீட்டில் சூரிய ஒளிபடும் இடத்தில் நின்றபடி நீராட வேண்டும். ஏழு எருக்கம் இலைகள், மஞ்சள் பொடி கலந்த அட்சதையுடன் பெண்கள், ஆண்கள், குழந்தைகள் உள்பட அனைவரும் தங்கள் தலைக்கு மேலே வைத்துக்கொண்டு நீராடுவது நல்லது.


 *எருக்க இலை கொண்டு ஏன் நீராடுகிறோம்?* 


மகாபாரதப் போரில் வீழ்த்தப்பட்ட பீஷ்மர் நினைத்த நேரத்தில் உயிர்விடலாம் என்ற வரத்தினால் உத்தராயணத்தில் உயிர்விடவேண்டி அம்புப் படுக்கையில் படுத்திருக்கிறார். காலம் போய்க்கொண்டே இருக்கிறது பீஷ்மரின் உயிர் பிரியவில்லை. அப்பொழுது அவரைப் பார்க்க வந்த வேத வியாசரிடம், 'நான் என்ன பாவம் செய்தேன்? ஏன் இன்னும் என் உயிர் போகவில்லை?" என்று மனம் வருந்தினார் பீஷ்மர். அதற்கு வியாசர், 'பீஷ்மா, ஒருவர் தன் மனம், மொழி, மெய்யால் தீமை புரியாவிட்டாலும், பிறர் செய்யும் தீமைகளைத் தடுக்காமல் இருந்ததும், இருப்பதும் கூட பாவம்தான். அதற்கான தண்டனையை அனுபவித்தே தீரவேண்டும்" என்று கூறினார். 


உடனே பீஷ்மருக்கு சபை நடுவே பாஞ்சாலியின் உடைகளை களைந்து துச்சாதனன் அவமானம் செய்தபோது அதை தடுக்காமல் இருந்து மிகப்பெரிய தவறு செய்தது நினைவிற்கு வந்தது. இதற்கு விமோசனம் இல்லையா? என்று கேட்டதற்கு வியாசர், எப்பொழுது உன் பாவத்தை உணர்ந்தாயோ, அப்போது அந்த பாவம் அகன்றுவிட்டாலும் அனைத்தையும் கண்டும் காணாமல் இருந்த கண்கள், செவி, வாய், தோள், கைகள், புத்தி உள்ள தலை ஆகியவை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றார் வியாசர். 


உடனே சூரியனின் நெருப்பைக் கொண்டு தன்னை சுட்டுப் பொசுக்குமாறு வேண்டுகிறார் பீஷ்மர். இதற்கு எருக்க இலையை காட்டிய வியாசர், அர்க்கம் என்றாலே சூரியன் என்று பொருள். எனவே இதனை தலையில் சூடியுள்ளார் சூரியன். பிரம்மச்சாரியான விநாயகருக்கு உகந்தது எருக்க இலை. அதேபோல் பிரம்மச்சாரியான உனக்கும் இந்த எருக்க இலையால் அலங்கரிக்கிறேன் என்றார். 


உடனே சிறிது சிறிதாக அமைதியடைந்த பீஷ்மர் ஏகாதசி அன்று உயிர்நீத்தார். புண்ணியம் கிடைக்கும் பீஷ்மருக்கு யாரும் இல்லாததால் நீத்தார் கடன் செய்வது குறித்து வியாசரிடம் வேண்டுகிறார் தர்மர். அதற்கு பதிலளித்த வியாசர், கவலைப்படாதே தர்மா, சூரியனுக்காக எருக்க இலை சூடி விரதம் இருக்கும் ரதசப்தமி நாளில் பாரத தேசமே பீஷ்மருக்காக நீர்கடன் அளிக்கும் என்று கூறினார். ரத சப்தமி நாளில் எருக்க இலைகளை வைத்துக்கொண்டு குளிக்கும் மக்கள் தங்கள் பாவங்களில் இருந்து விடுவித்துக்கொள்வதோடு, பீஷ்மருக்கு நீர்கடன் அளித்த புண்ணியம் கிடைக்கும் என்று அருளினார்.


கருத்துகள் இல்லை:

Maruti CSD Car April month Price List - Ajmer 2021

  Maruti CSD Car Price List April 2021 – Ajmer City Name                                   Description                                 Type ...