Remdesivir An Alternative Antiviral Drug to Fight against COVID-19
மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கான ரெம்டெசிவிர் மருந்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
மதுரை,
கொரோனா தொற்றை குணப்படுத்த ரெம்டெசிவிர் மருந்துகளை பயன்படுத்த மத்திய அரசுக்கு, மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். அதனைத் தொடர்ந்து ரெம்டெசிவிர் மருந்து கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வருகிறது
.
தற்போது கொரோனா இரண்டாம் அலை காரணமாக பாதிப்பு அதிகரித்து வருவதால், ரெம்டெசிவிர் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால், சென்னை கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட மருத்துவமனைகளில் மக்கள் நீண்ட வரிசையில், பல மணி நேரம் காத்திருந்து வாங்கிச் செல்லும் நிலை நிலவுகிறது.
இதனிடையே தென்மாவட்ட சேர்ந்த கொரோனா நோயாளிகளுக்கு பிரத்தியோகமாக சிகிச்சை அளிக்கும் வகையில் மதுரையில் கொரோனா சிறப்பு மருத்துவமனை செயல்பட்டு வருகின்றது.
இந்நிலையில், மதுரை அரசு கொரோனா சிறப்பு மருத்துவமனையில் 8 ரெம்டெசிவிர் மருந்து பெட்டிகள் திருடப்பட்டுள்ளதாக மருத்துவமனை தரப்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக, மருத்துவமனை வளாகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி, மருந்து சேமிப்பு கிடங்கு ஊழியர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாடு முழுவதும் ரெம்டெசிவிர் மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அதிக லாபத்திற்கு கள்ள சந்தையில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்வதற்காக இந்த திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளதா என்று கேள்வி எழுந்துள்ளது